Thursday, July 29, 2004

விடை கிடைச்சிருச்சேய்...!!!!

இத்தனை நாளா எம்மனசை அரிச்சுகிட்டு இருந்த அந்த கேள்விக்கு விடை கிடச்சிருச்சு. அதை உங்களுக்கும் சொல்லாம்னுதான் இந்த பதிவு. எந்த கேள்வின்னு சொல்லுடா மடையாங்கரீங்களா?? அதை தான சொல்ல வர்றேன், அதுக்குள்ள அவசரப்படுரீங்களே, கேள்வியை விட, அதுக்கு எப்படி விடை கிடைச்சுதுங்கிரது தான் முக்கியம். அதுனால அங்கே இருந்து வர்ரேன், கடைசியா கேள்வி என்னன்னு பார்ப்போம்..(இந்த இடத்துல ஒரு கொசுவர்த்தி சுருள் சுத்துர மாதிரி எபக்ட்டு குடுத்துட்டு மேற்க்கொண்டு படிங்க..)
நேத்து நம்ம காலேஜ் கூட்டாளி ஒருத்தன பார்த்து பேசிட்டு இருந்தேன் . ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் ஊருப்பக்கம் வர்ரான். philadelphia'ல உக்காந்து கணிப்பொறிய பிரிச்சு மேயுற வேலை, அவுங்க அப்புச்சி பாஷையில சொன்னா 'அமேரிக்காவுல கம்பிஓட்டுற எஞ்சினீரா இருக்கான்'. கொஞ்சம் என் கலர்ல இருந்தவன் இப்போ சனிக்கிழமையன்னைக்கு கோயமுத்தூர் க்ராஸ் கட் ரோட்டுல ஃபிகர் பார்க்க போற காலேஜ் பசங்க மாதிரி சும்மா பளபள'ன்னு ஜம்முன்னு ஆயிட்டான் (அதெப்படி சனிக்கிழமை மட்டும், க்ராஸ்கட் ரோடு வர்ற பசங்க அவ்ளோ கலக்கலா இருக்காங்க??.. சரி அந்த மேட்டர் இன்னொரு பதிவுக்கு வெச்சுக்குவோம்..!!). வந்தவங்கூட பேசுன மேட்டர்ல ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டன் பாருங்க.. ச்சே இதுதானுங்க, இந்த எழுத்தாளர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். எதை சொல்ல வந்தமோ அதைவிட்டுபுட்டு எல்லா விஷயத்தையும் சொல்றது. சரி விஷயத்துக்கு வர்ரேன்.
ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்னு சொல்றதுனால தப்பா எடுத்துக்கதீங்க.. நேர்ல பார்க்கிறது மட்டும் தான் ரெண்டு வருஷம் கழிச்சு, ஆனா தினம் ஒரு தடவையாவது யாஹூ'ல எப்படிடா இருக்கேன்னு கேட்டுகிட்டு தான் இருப்போம், அதுனால, ரொம்ப நாள் கழிச்சு வெளியூருல இருந்து வர்றவங்களை பார்த்ததும் 'எப்படிரா இருக்கிற? உடம்பு பாதியா போச்சு, ஒழுங்க சாப்பிடுறயா? அங்கேல்லாம் சோறு கிடைக்குமா?ன்னு அடுக்கு அடுக்கா கேள்வி கேக்குறதோ, இல்லை, வந்தவுங்க 'நம்ம ஊரு இன்னும் மாறவே இல்ல மாப்ள.. அங்கேயெல்லம் வந்து பாரு'ன்னு ஆரம்பிச்சு அவுங்க ஊரு பத்தி அடிச்சு விடுறத நம்மளும் வாய தொறந்துட்டு(கொஞ்சம் பொறாமாயோட..!) கேக்குற வாய்ப்போ இல்லாம போச்சு. 'பிரயாணம் சொளக்கியமா இருந்துதா?, பிளைட்டுல எதாவது ..ம்.ம் ??, கஸ்டம்ஸ்ல எவ்ளோ புடுங்கினாங்க?,'ங்கிரதை தவிற வேற ஒன்னும் புதுசா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது இல்லாம போச்சு. (எனக்கு என்ன வங்கிட்டு வந்தேன்னு கேக்க மாட்டனே, கேட்டா கிருபாஷங்கர் அண்ணாச்சி மரத்தடியில உக்காந்து பீல் ஆகிடுவாரு)
'அப்ப என்னத்ததாண்ட பேசுனீங்க', சும்மா வெட்டியா அதையும் இதையும் சொல்லிட்டு இருக்கிற..நற நற.... ரொம்ப பல்ல கடிக்காதீங்க, அதத்தான சொல்ல வர்றேன்..
தினம் தினம் யாஹூல பேசுனாலும், மாசம் ஒருதடவை போன்ல கூப்பிட்டு பேசுனாலும், நேர்ல பார்த்தா பேச பல விஷயம் இருக்குதானுங்களே..!! நாங்களும் பேசினோம், பேசினோம், சூர்யன் எப்.எம்'ல 'கிட்டுமாமா-சூசிமாமி' போடும் போது ஆரம்பிச்ச பேச்சு, கடிநேரம் தாண்டி, இல்லத்தரசிகள் நேரம், சிறுவர் நேரம், காதலர்கள் நேரம்ன்னு எல்லா நேரத்தையும் தாண்டி, சென்னை சில்க்ஸ்'சின் என்றும் இனியவை முடியற வரைக்கும் பேசிட்டே இருந்தோம். இந்த பழங்கதை பேசுறதுங்கிறது அப்படி ஒரு சுகமான விஷயம் போங்க, அதுவும் கல்லூரி கால லூட்டிகளை அசை போடுறது எப்பவுமே சலிக்காது போல. இதுக்கும் நாங்க படிச்சு முடிச்சு ரொம்ப நாளெல்லாம் ஆகுல, இப்பத்தான், ஒரு 5 வருஷம் தான் ஆச்சு, (இன்னும், முன்னாடி போற வண்டியில இருக்கிற பிகர பார்க்க போய் கீழே விழுந்து கைய ஒடிச்சுகிர வயசுல தான் இருக்கோம்!!)
எல்லாம் பேசிட்டு, கடைசியா பொழுதோட வூட்டுக்கு போனதும், எங்கம்மா 'அப்படி என்னத்தடா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீங்க, அதுவும் பொழுது சாயுர நேரத்தில பாலத்துல உக்காந்துட்டு ?'ன்னு கேட்டுது, நானும் யோசிச்சு பார்த்தேன், என்ன தான் பேசுனோம், 'முதன்முதலா கோவை குற்றாலம் போய் பீர் அடிச்சதுல இருந்து, TCS IPOவிடுறது வரைக்கும்' பேசியிருக்கோம், என்னன்னு சொல்றது 'பேசுனோம், அவ்ளோதான்'ன்னுட்டு போய்ட்டேன். அதுக்கு எங்கம்மா 'ஆமா வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருக்கறது தான் உங்களுக்கு ஸ்கூல் போற காலத்துல இருந்தே வழக்கம் ஆச்சே'ன்னுட்டே கொல்லை பக்கம் மாட்டுக்கு தீவனம் வைக்க போயிட்டங்க. சடார்ன்னு, அப்பத்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது, , தினம் தினம் எங்க ஊரு மாரியாத்தா கோயில தாண்டி போகும்போதெல்லம், அங்க கோவில் திண்ணையில உக்காந்து பேசிட்டு இருக்கிற பெருசுகளை பார்க்கும் போதெல்லாம், அந்த கேள்வி என்மனசுகுள்ள தோணும்.'அப்படி பொழுதுக்கும் என்னத்த தான் இதுக பேசும்?ன்னு..(அப்பா ஒருவழியா விஷயத்துக்கு வந்தாச்சு!!). இப்போ அதுக்கு விடை கிடைச்சுருச்சு.. அதுக்கு பேரு 'வெட்டி அரட்டை'. இப்பத்தான் எனமனசுல ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குதுங்க, இத்தனை நாளா என்மனசை அரிச்சுட்டு இருந்த அந்த கேள்விக்கு விடை கிடச்சிருச்சு. (மேலே சொன்னதை அப்படியே நடிகர்திலகம் செவாலியே சிவாஜி கணேசன் குரல்ல படிச்சுக்கோங்க) அதை உங்களுக்கும் சொல்லாம்னுதான் இந்த பதிவு. அப்பா எப்படியோ கஷ்டப்பட்டு சொல்லி முடிச்சுட்டேன்.. போய்டு மறுக்கா வரனுங்க..!!!

( அமேரிக்கா ரிட்டர்ன் இஞ்சினீயர்ல ஆரம்பிச்சு, சூரியன் எப்.எம் வழியா, க்ராஸ்கட் ரோட்டுக்கு போய், கல்லூரி வாழ்க்கை பத்தியெல்லாம் பேசிட்டு வந்து, இப்படி சப்புன்னு முடிச்சுட்டியேடா பாவி, இதுக்கா நாங்க இதை படிசோம்னு கோவப்படுரவங்க எல்லாரும், இதுக்கு முன்னாடி நான் எழுதின பதிவை பாருங்கோவ்....)

ஒன்னுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

Sunday, July 25, 2004

யாரும் இதை படிக்காதீங்க..!!

இங்கே உருப்படியான விஷயம் எதுவும் இல்லீங்க.. அதுனால மேற்கொண்டு இந்த பதிவை படிக்காதீங்க..


அட.. அதுதான் சொல்றேனில்ல..இது ஒன்னும் சுவரசியமான எழுத்தில்லீங்க..யாரும் இதை படிக்கறதுமில்லை, இதை படிக்கனும்னு நினைக்கறதுமில்லீங்க. இதை படிக்கறதுக்காக உங்க பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க..அய்யோ நான் சொல்றத ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கரீங்க, படிக்கதீங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க இன்னும் படிச்சுட்டே இருக்கறீங்க.. எனுங்க, உங்க நேரத்தை இப்படி ஒரு உதவாக்கரை விஷயத்தை படிக்க செலவு செய்யரீங்க?. எப்படி இந்த மாதிரி ஒரு வெட்டியான விஷயத்தை உங்க மனசு ஏத்துக்குது? உங்களுக்கே தெரியலையா, இது வெறும் குழப்பமான,ஆகாவலி விஷயம்ன்னு?..அட போங்க நீங்க ஒன்னும் கேக்குற மாதிரி இல்லை, நான் உங்களுக்காகத்தான் இவ்ளோ சொல்றேன், உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், இதையெல்லாம் படிக்கதீங்க. தயவு செஞ்சு வேண்டாங்க. இது சுத்தமா ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத, ஒரு அர்த்தமும் இல்லாத குப்பை, இதைப்போய் எதுக்கு இப்படி நான் சொல்ல சொல்ல படிக்கறீங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது போங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு விடாம இன்னும் இதை படிச்சுட்டே இருக்கறீங்க.


ஓ!! நீங்க யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ரொம்ப அடம்புடிக்கிர ஆளு போல, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேங்கரீங்க, நான் சொல்றத காதுலயே போட்டுக்க மாட்டீங்க போல??.. இது உன்மையிலயே படு முட்டாள்தனமுங்க, வடிகட்டுன கிறுக்குதனமுங்க..... சரி!!. எப்படியோ போங்க!!.. நான் எதுக்கு என்னோட உருப்படியான நேரத்தை இந்த மாதிரி ஒரு அளுகிட்ட வெட்டியா புத்திசொல்லிட்டு இருக்கனும், அதுவும் நான் சொல்றத கேக்கவே மாட்டேன்னு அடம் புடிக்கற ஆளுகிட்ட நான் எதுக்காக கெஞ்சிட்டு இருக்கனும், அதுனால, இத்தோட சரி, இனி நான் உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்லப்போறதில்ல்.. படிக்கறதுன்னா படிங்க.. உங்க இஷ்டம் அது... ஆனா எனக்காக ஒரே ஒரு சகாயம் மட்டும் செய்யுங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இதை படிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..
 

Monday, July 19, 2004

எழுத்து திருட்டு..

இலக்கிய உலகத்தில தான் என் எழுத்தை அவர்(ன்) பேருல வெளியிட்டுடான், என் எழுத்தை அவர்(ன்) காப்பியடிச்சுட்டான்னு அடிக்கடி பரபரப்பு ஆகும் (பெரிய அடிதடி எல்லம் நடக்குது இந்த மேட்டருக்கு!!)..ஆனா அது இலக்கிய எழுத்துக்கு மட்டுமில்ல எல்லா வகை எழுத்துக்கும் பொருந்தும் போல இருக்குங்க.. உலகம் பூராவும் வியாபாரத்தில சக்க போடு போட்ட 'you can win' எழுதின நம்ம ஊரு 'ஷிவ்கேரா' இப்ப அப்படி ஒரு ப்ரச்சனையில மாட்டியிருக்காரு.. அவரு லேட்டஸ்டா எழுதி(!) வெளியிட்டுருக்கிற Freedom is Not Free'ங்கிற புஸ்தகம் தான் பல பிரச்சனைய கிளப்பிவிட்டுருக்கு.
அம்ரித்லால்'ன்னு ஒருத்தர், ரிட்டயரான நம்ம ஊரு ரயில்வே ஆபிசர், (இவரும் கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டு புஸ்தகம் எழுதியிருக்காரு,பாவம் நம்ம ஆளுக யாரும் பெருசா அதுக்கு ஆதரவு குடுக்கல). இருந்து இருந்தாப்புல ஒரு நாள் இவருக்கு நம்ம ஷிவ்கேர கிட்ட இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கு, இவரும் போய் பார்த்து பேசியிருக்காரு. அப்போ ஷிவ்கேர நம்ம பிற்காலத்தில 'ஒட்டுக்கா சேர்ந்து வேலை பார்ப்போம்'னு சொல்லியிருக்காரு, இவரும் தலைய ஆட்டிட்டு வந்திட்டாரு, அங்கே இருந்து வந்ததும்,வரும் போது ஷிவ்கேர இவருக்கு கிஃப்டா குடுத்த அவரோட Freedom is Not Free'ங்கிர புஸ்தகத்த படிச்சதும் தான் இந்த மனுஷனுக்கு ஷிவ்கேர 'ஒட்டுக்கா சேர்ந்து வேலை பார்ப்போம்'ன்னு சொன்னதோட அர்த்தம் புரிஞ்சிருக்கு.. அந்த புஸ்தகத்தில பல இடங்கள்ல, நம்ம அம்ரித்லால் ஒரு 9 வருஷத்துக்கு முன்னாடி எழுதி பெருசா விற்ப்பனையில சாதிக்காத India—Enough is Enough'ல இருந்து ரொம்ப சர்வ சாதரணமா ஷிவ்கேர பல மேட்டர சுட்டிருக்காரு, அதுவும் எந்த விதமான acknowledgement'ம் இல்லாம.. மேட்டர சுட்டது மட்டும் இல்லாம, அப்படியே வரிக்கு வரி 'ஈ-யடிச்சான் காப்பி' மாதிரி அம்ரித்லால் புஸ்தகத்தில எழுதினத அப்படியே அவரோட எழுத்தா எழுதியிருக்காரு.
அம்ரித்லால் பயங்கிர கடுப்பு ஆகி ஷிவ்கேரவோட அந்த புஸ்த்கத்த வெளியிட்ட McMillanக்கு 'நான் கோர்ட்டுக்கு போவேன்னு' காட்டமா ஒரு மெயில்'ல தட்டி விட்டிருக்காரு, அப்புறம் பல முயற்ச்சிக்கு பிறகு ஷிவ்கேர'வை கோர்ட்டுக்கு இழுக்காம இருக்க ஒரு பெரிய தொகைக்கு சமரசம் ஆகியிருக்காரு (25 லட்சம்ன்னு பேசிக்கிறாங்க!!)
இதுல ஷிவ்கேர என்ன சொல்றாரருன்னா, 'நான் அப்பப்ப படிக்கிற, கேள்விப்படுற, எனக்கா தோணுற விஷயம் எல்லாத்தையும் உடனே கம்ப்யூட்டருல ஏத்தி வெச்சுக்குவேன், இது என்னோட 25 வருஷ பழக்கம், அப்புறம் ஒரு புக் எழுதும் போது அந்த விஷயங்களை எல்லாம் ரெஃபர் பண்ணிப்பேன், அதுனால என்னோட எல்லா எழுத்துக்கும் நான் தனித்தனியா acknowledgement குடுக்கிறதுங்கிறது நடக்குர காரியம் இல்லை'ங்கிறார். இதுமட்டுமில்லாம இன்னும் ஒரு சமாச்சாரம் சொல்றார் 'பேடண்ட் வாங்காத எழுத்துல இருந்து எதாவது விஷயங்களை எடுத்து உபயோகப்படுத்தறது ஒன்னும் சட்ட ரீதியா தப்பு இல்லா'ங்கிறாரு.

ஊருல இருக்கவனுக்கு எல்லாம் எப்படி நேர்மையா முன்னுக்கு வர்றதுன்னு சொல்றதுக்கு புஸ்தகம் எழுதற ஆளு, அதெப்படிங்க இன்னொருத்தர் எழுத்த எடுத்து தன் பேருல எழுதிட்டு அது ஒன்னும் சட்டரீதியா தப்பு இல்லைன்னு, பெருமையா சொல்றாரு..???
ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..

இது பத்தி இன்னும் விலாவாரியா தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்க.. இங்க போய் பாருங்க
(acknowledgement'க்கு நல்ல தமிழ் வார்த்தை என்னன்னு யாரவது, ஈழநாதன் மாதிரி, விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..)


அஞ்சலி..!!

cry

பெரியவர்கள் செய்த அஜாக்கிரதைகளுக்கு, தங்கள் வாழ்க்கையை கருக்கிகொண்ட இளம் மொட்டுகளுக்கு

கண்ணீர் அஞ்சலி

Tuesday, July 13, 2004

கிருஷ்னபரமாத்மா - கம்யூனிசத்தின் தந்தை

மார்க்ஸ், லெனின், மாவோ, மாத்ரி கம்யூனிச தலைவர்களுக்கெல்லம் நம்ம கிருஷ்னபரமாத்மா முன்னோடின்னு நம்ம 'வாழும்கலை' ஷ்ரி ஷ்ரி ரவிஷங்கர் ஹிந்துஸ்த்தான்டைம்ஸ்'ல் Lord Krishna, the father of communism'னு ஒரு கட்டுரை எழுதியிருக்காருங்க(எங்க ஊர் பக்கம் இப்போ இவரோட வாழும் கலைப்பயிற்ச்சி, சத்சன்ங். எல்லாம் ரொம்ப பிரசித்தம்).
அவரு என்ன சொல்றாருன்னா..
"எல்லாரும் எல்லாம் சமமா கிடைக்கனும், தப்பு செய்யறவங்களுக்கு கடுமையான தண்டனை குடுக்கனும், இது மூலமா ஒரு சுயநலமில்லாத, மக்களை எந்த வகையிலும் ஒடுக்காத சமூகம் உருகவாகனும்ங்கிறது தான் கம்யூனிசத்தோட அடிப்படை. 5230 வருஷங்களுக்கு முன்னாடியே கிருஷ்னர்'ங்கிற அந்த வரலாற்று(/இதிகாசத்து) கதாபாத்திரத்தோட வாழ்க்கையும், அவரோட கருத்துகளை சொல்ற பகவத்கீதை'யும் அதே கருத்துகளை தான் வலியுறுத்துது, அதுனால கிருஷ்னர் தான் உண்மையில 'கம்யூனிசத்தின் தந்தை' அப்படீங்கிறார். கிருஷ்னர் தான் உண்மையில பல சமூக மாற்றங்களையும், வழிபாட்டு முறைகளில் பல புரட்ச்சிகளையும் கொண்டு வந்தார்ங்கிறார்." (அதென்னமோ இந்திரனுக்கு செஞ்சிட்டு இருந்த பலிகளை மாத்தி, கோவர்தன பூஜை'ங்கிறத கொண்டு வந்தார்ன்னு சொல்றார்-- இந்த மேட்டரைப்பத்தியெல்லம் எனக்கு ஒரு மண்ணும் தெரியாதுங்க!!).
இன்னும் இந்த மாதிரி நிறைய சொல்லியிருக்காருங்க..நடுவுல இன்னொன்னும் சொல்றாரு, "அதாவது மேலை நாடுகள்ல தான் மதநம்பிக்கைக்கு எதிரா விஞ்ஞானிக யாராவது எதாவது சொன்னா அவங்கள புடிச்சு கொடுமைபடுத்தறதெல்லம்.. நம்ம ஊருல (அதாவது இந்து மதத்தில).. அப்படியெல்லம் இல்லை..அந்த மாதிரி யாராவது சொன்னா அவங்கள உற்சாகப்படுதிருகாங்க.". அப்படிங்கிறார்.
அப்படியே சன்னமா சும்மா கம்யூனிசம் பேசறவங்களை ஒரு எத்து எத்தராரு..'இங்கே பல பேரு கம்யூனிசம் பேசிட்டு முதலாலித்துவ வாழ்க்கை வாழறாங்க அப்படிங்கிறார்.. (ச்சே.. ஏன்தான்..இந்த நேரத்தில புத்தக வெளியீட்டு விழாவில நம்ம தமிழினத்தலைவர் கருணாநிதி 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்'னு சொன்னது நினைப்புக்கு வருதோ!!)
இதெல்லாம் விட முடிவா அவரு ஒண்ணு சொல்லியிருக்கார் பாருங்க..'கேரளாவில குருவாயூருக்கு போற கம்யுனிஸ்ட்டுகளும், பெங்கால்ல துர்கா பூஜையில கலந்துக்கிற கம்யுனிஸ்ட்டுகளும் இனிமேல் அதுக்காக சங்கடப்படவேண்டாம்,, ஏன்னா அதுவும் கம்யூனிசம்தான்'ங்கிறார்
நமக்கு வழக்கம் போல ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..

Sunday, July 11, 2004

ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!! ( Part II )

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் தொடரும், என் பயணக்குறிப்புகளுக்கு உங்களை மீண்டும் வரவேற்க்கிறேன்...

ஒரு வழியா..எப்படியோ சமாளிச்சு வண்டிய தூக்கி ஒரு ஓரமா நிறுத்திட்டு, அந்த பக்கமா வந்த ஒரு பள்ளிகூட பையன நிறுத்தி அவனோட சைக்கிள்ல லிஃப்ட் கேட்டு பக்கத்து ஊருக்கு போய்சேர்ந்தனுங்க. அங்க போனா 'ஞாயித்துகிழமையெல்லம் டாக்டர் வரமாட்டரு கண்னு நீ அப்படியே பஸ் புடிச்சு டவுனுக்கு போய்டு'ன்னு K.MUTHUSAMY. MBBS'ங்கர போர்டுக்கு கீழ உக்காந்துட்டு ஒரு பெருசு தகவல் சொல்லுது... (இண்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த்!!!).
நல்ல வேளையா.. அங்க நின்னுகிட்டு இருந்த ஒரு மினிடோர் (அதாங்க.. எலிக்குட்டி விலையில் புலிக்குட்டி வாகனம்னு விளம்பரம் போடுவாங்களே.. சரக்கு ஏத்தர ஆட்டோ..!!) வண்டிய கூட்டிக்கிட்டு போய்.. நேஷனல் ஹைவேஸ்ல அநாதையா நின்னுகிட்டிருந்த என்னோட பைக்க ஏத்திக்கிட்டு நானும் ஊர் வந்து சேர்ந்தேன்.
அப்புறம்.. இப்பொ மாவுக்கட்டு போட்டுகிட்டு, எங்கய்யன்.. 'ஒழுங்கா முறையா போய்ட்டு வராம.. இப்பொ உனக்கும் வண்டிக்கும் சேர்த்து 3 ரூவா செலவுன்னு' திட்டுறத கேட்டுகிட்டு.. விட்டத்த பார்த்துட்டு உக்காந்திருக்கேன்..

மொத்ததில 3 விஷயம்ங்க..
1.கண்டிஷன் இல்லாத வண்டியில வேகம் போகக்கூடாது.
2.அப்படியே போனாலும் என்ன மாதிரி ஹெல்மெட் போட்டுகிட்டு தான் போகனும் (அது மட்டும் போடம நான் போயிருந்தா.. அநேகமா இந்நேரம் நம்ம வீட்டு வாசல்ல.. 'ஊஊ'தான்..)
3. இது ரொம்ப முக்கியமான பாய்ண்ட்டு...ஒழுங்கா போனமா வந்தமான்னு இருக்காமா.. முன்னாடி போறா புள்ளையா பாக்க அலையகூடாது....

ஆனா இதுவும் ஒரு வகையில நல்லதுதான் பாருங்க.. இவ்ளோ நாளா வேலைபாக்குற இடத்துல நம்மல பார்த்தா தள்ளி பொயிடுர ஆளுக கூட இப்போ ஆப்பிள், ஹார்லிக்ஸோட வந்து பார்த்து பேசறாங்க
(நான் ஆளுகன்னு சொன்னது ஆம்பிளைகள மட்டும் தான்......
சத்தியமாங்க........!!!
என்னங்க சொன்னா நம்பமாட்டேங்கரீங்க....
சரி.. சரி ..
பொம்பிள புள்ளைக தான்.. போதுமா!!)

ஆகவே.. தமிழ்கூறும் நல்லுலக மக்களே...யாரும் அவசரப்பட்டு 'அப்பா கொஞ்சநாள் இவன் கிறுக்கரது இருக்காது நிம்மதின்னு மட்டும்' நினைச்சர வேண்டாம்.. இந்த 'ராசா' இது மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் அடங்கிரமாட்டான்..
எழுதியே தீருவான்....தீருவான்....தீருவான்.. (எக்கோ எபக்ட்டு!!)

(பையன் சும்மா வீட்டுல இருக்கானேன்னு எங்கய்யன் மார்க்சீம்கார்க்கீயின்'தாய்'ன்னு ஒரு புஸ்தகம் வாங்கிட்டு வந்து குடுத்திருக்காரு.. அது பத்தி கொஞ்சம் கேள்வி பட்டு இருக்கேன், ஆன பெருசா ஒன்னும் தெரியாது..இனிமேல் தான் எழுத்துக்கூட்டி ஆரம்பிக்கனும்.. )

போய்ட்டு மறுக்கா வரனுங்ன்க..!!!

ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!

நான் வலைப்பதிவு செய்ய ஆரம்பிசிச்சு பிரபலமானதுனால (?) கண்ணு பட்டிருச்சு போல.. போன வாரம் கிணத்து மோட்டாருக்கு ரிப்பேர் சாமானம் வாங்க, எங்க அய்யா சொல்லியும் கேக்காம, அவர் நான் காலேஜ் போக ஆசையா வாங்கி குடுத்த என்னோட செல்ல பைக்'க எடுத்துட்டு போயிருந்தனுங்க. போன காரியம் எல்லம் ஒழுங்கா முடிச்சுட்டு, வழக்கம்போல, வர்ற வழியில உக்கடத்துல பானி பூரி சாப்பிட்டுட்டு சந்தோஷமா வந்துட்டிருந்தனுங்க.. அது வரைக்கும் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க..நான் பாட்டுக்கு டீவி விளம்பரத்துல வற்ர மாதிரி பாட்டு பாடிட்டடு ஒழுங்கா வந்துட்டிருந்தேன், திடீர்னு ஒரு எழுமிச்சை உருண்டை (அதாங்க.. மஞச கலர்ல குட்டியா இருக்குமே.. மாருதி வண்டி.. 'ஜென்') சர்ருன்னு நம்மல சைட்டுகட்டி முன்ணாண்ட போச்சுங்க.. (அப்பவே என் மனசுகுள்ளே ஒரு திகில் தான்). அந்த வண்டியில பின்னாடி ஒரு அழகான பொண்ணு வேற இருந்ததும் நம்ம வண்டி அதுவா ஸ்பீடு எடுத்ததுது பாருங்க..(நிஜம்மா.. நான் ஒண்ணுமே செய்யல!!) சும்மா 80-90ல அப்படியே பறந்துட்டு இருந்தேன்.. முன்னாடி போன வண்டியும் சும்மா சொல்ல கூடாதுங்க, பட்டய கிளப்பிட்டு போகுது.. (அப்புறம் நம்ம ஓட்ட வண்டியே அவ்ளோ வேகம் போன அவுங்க வண்டி போகாதா??) நானும் வேகமா போய் எப்படியாவது அந்த புள்ள முகத்த பார்க்கணும்னு பார்க்கிறேன்..ம்ஹூம் ஒண்ணும் வேலைக்கு ஆகல..நானும் போறேன் அவங்களும் போறங்க.. என்னமோ சினிமாவுல வில்லன் கிட்ட மாட்டியிருக்கிற கதாநாயகிய காப்பாத்தபோற ஹீரோ மாதிரி போய்க்கிட்டே இருந்ததேன். ஒரு கட்டத்துல எதிர்ப்பார்ட்டி வண்டி கொஞ்சம் வேகம் குறைஞ்ச மாதிரி இருந்தது.. ஆஹா.. 'ராசா.. நீ சிங்கம்டா.. நினைச்சத முடிக்காம விடமாட்டியே"ன்னு எனக்கு நானே தட்டி குடுத்துட்டு இன்னும் கொஞ்சம் வேகம் ஏத்தினேன்.. அப்புறம் தாங்க வினையே.. 2-3 வருஷமா தோட்டத்துல கட்டை வண்டியலயும், எங்க அய்யனோட 'நம்ம ஊரு வண்டி'யலயுமே போய் வந்துட்டு இருந்ந்துட்டு. பைக்'க சீண்டாத கோவத்துலயோ என்னமோ.. படீர்னு ஒரு சத்தம், ஒழுங்கா ரோட்டுல ஒரு ஒரமா போய்யிட்டிருந்த வண்டி திடீர்னு ரோட்டுல குறுக்கும் நெடுக்குமா.. ரோட்டு அகலம் அளக்கற மாதிரி போக ஆரம்பிச்சுது.. என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு சுதாரிக்கறதுகுள்ளே.. நான் ரோட்டுக்கு மறுபக்கம் கிடக்கிறேன், நம்ம வண்டி ஒரு 5 அடி தள்ளி அங்கபிரதட்சனம் பண்ணிட்டிருந்தது. அந்த நிலமையிலும் நான் முன்னாடி போன எழுமிச்சை உருண்டைய பார்க்கிறேன்.. அதுபாட்டுக்கு போய்கிட்டே இருக்குது. (அப்புறம்..அவன் ஏன் பின்னாடி பார்க்கிறான்??) ஒரு வழியா எழுந்து வண்டிய போய் பார்த்தா.. பஞ்சர்ர்ர்.. (பின்ன 5 வருஷம் ஆன டயர வச்சுகிட்டு அவ்ளோ வேகம் வந்தா?).. சரி இன்னைக்கு 'நடராசா சர்வீஸ்' தான்னு முடிவு பண்ணி வண்டிய தூக்கப்பார்த்தேன்..முடியல.. வலது மணிக்கட்டு எதோ பழிப்பு காட்டுற சின்னபுள்ள வாய் மாதிரி ஒருபக்கமா திரும்பி இருக்கு....

(இப்போதைக்கு நம்ம ஊருல இரண்டாம் பாகம் போடுறது தான் லேட்டஸ்ட் ஸ்டைல்..!! hyderabad blues'ல இருந்து.. நம்ம 'ரமணா' வரைக்கும்.. அந்த ஸ்டைல பின்பற்றி..)

தொடரும்.... இன்னும் சில மணிநேரங்களில்...
(ஒத்த கையில எவ்ளோ நேரம்தான் தட்டுறது..!!!)

Friday, July 2, 2004

சுட்ட பழம்..!!!

சத்தமான இரவில்..

முன்னே செலுத்தியது பயணம்,
பின்னே இழுத்தது இதயம்,

நிலவிற்க்கு என்மேல் கோவம்போல்,
வழியனுப்ப வராமல் விலகிநின்றது.

கனத்த இதயம் ஏங்கி நிற்க,
ஈர இமைகள் துணைதந்தது.

உணர்வுகளை பெயரிட முயன்றேன்,
நித்திரை இழந்து பரிதவித்தேன்.

இரவின் நிசப்த்ததிற்க்கு காதுகொடுத்தேன்,
முத்தமிட்டு தோள்கொடுத்தது.

இருளின் கருப்பில் வண்ணம் கண்டேன்,
நிஜத்தின் நினைவில் நிலைத்து நின்றேன்.

இந்த இரவின் விடியலை நாடி,
'நம்பிக்கை' குழந்தை கருவுற்றேன்.

எப்படிங்க இருக்கு??? ஐய்யோ!! இவன் இது வேற ஆரம்பிச்சுட்டானான்னு விசனப்படாதீங்க..!! இது நம்ம சரக்கு இல்ல..!! (நம்மள அப்படியெல்லம் யாரும் நினைக்க மாட்டீங்க.. இருந்தாலும் ஒரு சின்ன பேராசை..)
'சிந்து ஜா'ன்னு ஒரு அம்மணி எழுதியிருக்கிற மேட்டரு இது..!! அவுங்க தங்கிலீஷ்'ல் எழுதியிருந்ததை யுனிகோட்டுக்கு மாத்துனது மட்டும் தான் நான்!!(எதோ நம்மால ஆன ஒரு சேவை).. இது மாதிரி நிறையா எழுதியிருக்காங்க.. நல்லயிருக்கா இல்லையான்னு சொல்ற அளவுக்கு நமக்கு பத்தாதுங்க.. (அப்படியே நான் சொன்னாலும், யாரு அதை ஏத்துக்க போறாங்க??).. யாரவது விஷயம் தெரிஞ்ச பெரியவங்க பார்த்து சொல்லுங்கய்யா!!

(அப்பா..!! எப்படியோ ஒரு பதிவு பண்ணியாச்சு...!!!)