Sunday, August 22, 2004

வலைப்பூ பக்கம் போறேன்.

யாரு நம்மளைப்பத்தி என்ன சொல்லிகுடுத்தாங்கன்னு தெரியல, திடீர்ன்னு போன வாரம் "உங்களை பத்தி சொல்லுங்க ராசா"ன்னு மதி(யக்கா?)கிட்ட இருந்து ஒரு கடுதாசி வந்துச்சு. சரி, நம்மளையும் மதிச்சு கேக்க கூட ஆள் இருக்கு இந்த உலகத்திலன்னு, நானும் என் அருமை பெருமையெல்லாம் தெளிவா(!) எடுத்து சொல்லி ஒரு பெரிய கடுதாசிய அனுப்பிட்டு, காய் புடுங்கினா காட்டுல அடுத்த மழைக்கு முன்னால ஒரு உழவு ஓட்டி விட்ருவோம்னு கிளம்பிட்டேன்.
திரும்பி வந்து பார்த்தா, காத்து பலமா அடிச்சா குப்பை கூட கோபுரத்துல ஏறி பரதநாட்டியம் ஆடும்பாங்களே, அந்த மாதிரி, மதிகிட்ட இருந்து "நீதாண்டா இந்த வாரம் 'வலைப்பூ'க்கு ஆசிரியர்"ன்னு மறுபடியும் ஒரு கடுதாசி.
சரி தான், குழந்தைக்கு அழகா தலை சீவி, பவுடர் எல்லாம் போட்டு, கொஞ்சம் மையெடுத்து கன்னத்துல வப்பாங்களே, கண்ணு பட்டுரக்கூடாதுன்னு, அதுமாதரி, வாராவாரம் ஒரு ஆளுன்னு, கலக்கிட்டு இருக்கிற வலைப்பூ'க்கு, ஒரு திருஷ்டி பொட்டு வைக்க ஆசப்படுராங்க போல, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பனேன்னு, நானும் சரின்னு சொல்லிட்டன். (நமக்கு தான் தாராள மனம் ஆச்சே, யார் எது கேட்டலும் மறுக்க மாட்டமே!!)

அதுனால, இந்த ஒரு வாரம் பூராவும் தோட்ட வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு 'வலைப்பூ' பக்கம் போகப்போறேன். வலைப்பூ ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
இருக்குற பதிவுல எழுதவே ஒன்னும் தெரியல, நம்மளைப்போய் வலைப்பூ'ல எழுதுன்னா? சும்மா, ஒரு ஆர்வத்துல சரின்னு சொல்லிட்டேன் இப்போ என்ன எழுதறதுன்னே தெரியல, யாரவது எதாவது ஒரு வரி எடுத்து குடுங்கப்பா...

(ச்சே..!! 25வது பதிவும் அதுவுமா, எதாவது ஒரு கலக்கல் மேட்டர் எழுதி பின்னிரனும்னு நினைச்சேன், இப்படி என்ன எழுதறதுன்னு சொல்லி குடுங்கப்பான்னு கெஞ்சற மாதிரி ஆயிடுச்சே.. எல்லாம் நேரம் "ஆசை இருக்கு தாசில் செய்ய, அதிர்ஷ்ட்டம் இருக்கு எருமை மேய்க்க'"ன்னு சும்மாவா சொன்னாங்க)

1 comment:

Chandravathanaa said...

அந்தப் பொட்டை வைச்சதும் குழந்தையின் முகத்தில்
எப்படியொரு ஜொலிப்பும் அழகும் வருகிறது தெரியுமா?