Thursday, July 25, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 1

”நம்மூர் ஹோட்டல்ல தோசைன்னு சொன்னா ரோஸ்ட் தான இதென்ன இப்படி ஊத்தாப்பமும் இல்லாம கல்தோசையும் இல்லாம ஒரு கிரகத்தை குடுக்கறான்”

”அது தோசை, இது தோசா” - என்று ஒரு மாபெரும் ரகசியத்தை சகநட்பு விளக்கி சொல்லி் முதன்முதலில் ஒரு அதிகாலையில் பெங்களுர் உணவகங்களிடன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான், தோசா’வை தொடர்ந்து இந்த ஊரில் புளிச்சட்னி/வெங்காயசட்னி என்பதோ யாரும் கேள்வியேபட்டிராத ஒரு வஸ்து என்பதை தெரிந்தகொண்டபோது ‘ஐயகோ’ என்று இருந்தது.

ஐயகோ’க்கள் அத்துடன் நிற்கவில்லை, ஏறக்குறைய கஞ்சி பக்குவத்தில் தயிர்பச்சிடியுடன்  பரிமாறப்படும் வெண் பொங்கலும், எதாவது ஒரு ‘நீர்க்காய்’ போட்டு வெல்லத்தில்‘அசட்டு தித்திப்பு’டன் வழிந்து ஓடும் சாம்பாருமாக, ‘தப்பு பண்ணிட்டயே ராசா’ என்று உள்ளூர ஒரு உதறுல் ஏற்படுத்திவிட்டன.

பின் மெதுவாக காலையில் உடுப்பிசாம்பாரும் அதில் மிதக்கவிட்ட உளுந்துவடையும் இட்லியும் - மதிய நேரத்து ரைஸ்பாத் / மொசுரு அன்னா - இரவுக்கு ரொட்டி-கறி அல்லது செட்தோசை (பல்யா பேடா, சட்னி எக்ஸ்ட்ரா கப் கொடி) என்று ஒரு டிசிப்ளின் உருவாகி அந்த உதறலை மட்டுபடுத்தின.
பின்னர் 6 மாசம் கழித்து யாராவது புதிதாக வந்து ’ஐயோ பெங்களூர்ல சாப்பாடு ஒத்துவராதே எப்படி சமாளிக்கற’ன்னு கேட்டா ஒரு மணி நேரம் உக்கார வச்சு காதுல ரத்தம் வர்ற அளவுக்கு கதற கதற பெங்களூர் சாப்பாட்டு புராணங்களை பொழிந்துதள்ளும் அளவுக்கு முன்னேறியாச்சு. :) அந்த புராணங்களை எல்லாம் ஆவனப்படுத்தி கல்வெட்டுல வெட்டிவச்சுட்டா நமக்கு பின்னாடி வர்ற சந்ததியினர் அதை பார்த்து படிச்சு தெரிஞ்சு தெளிவா நடந்துக்கவாங்கன்னு.. இதோ...

(புதிய நாகரிக, கார்ப்பரேட் கார்டுகளை தேய்க்க மட்டுமே என பல இடங்கள் உண்டு, அதெல்லாம் வெள்ளிக்கிழமை TOIல வரும் பார்த்துகிடுங்க, இந்த தொகுப்பு பழைய / சின்ன / உள்ளூர் / சுவையான, இடங்கள் மட்டும்)
@venkiraja கேட்டமாதிரி 

காலை :

நகரெங்கும் வியாபித்திருக்கும் SLV, சாகர், காமத், அ.ஆ.ப, உடுப்பி மாதிரியான வழமையான இடங்களை தாண்டி விசேஷமான (நான் போன) சிலது மட்டும்

# ப்ராமின்ஸ் காஃபி பார்
கொஞ்சம் பழைய பெங்களூர் வாசத்தோட, பசவனகுடி’க்கும் சாம்ராஜ்பேட்’க்கும் நடுவால சங்கரமடத்துக்கு பக்கத்துல இருக்கும் ஒரு பழைய கடை. 50வருசமா இருக்காம், பெஸ்ட் இட்லி அவார்ட் எல்லாம் வாங்கியிருக்காங்களாம். அருமையான இட்லி, பொதுவா இந்த ஊர் சாகர்’களில் கிடைக்கும் அரிசி ஜாஸ்த்தி போட்ட உதிரிப்போகும் இட்லியா இல்லாம, நல்ல மல்லிப்பூ மாதிரியான இட்லி, நிறையா நெய்யும் முந்திரியும் மிதக்கும் கேசரி, காரபாத் (வெள்ளைரவை தான் கொஞ்சம் கேரட்டும் பட்டானியும் போட்டு டகால்டி வேல காட்டுனது) , அவ்ளோ தான் மொத்த கடையோட மெனுவுமே, வேற ஒண்ணும் கிடைக்காது, சாம்பாரும் கிடையாது, சட்னி மட்டுமே (அன்லிமிட்டட்). இங்க வழக்கமா வர்ற ஆசாமிகள் மேல காசுகுடுத்து ஒரு துண்டு வெண்ணைய வாங்கி இட்லிமேல தடவிக்கறாங்க, நமக்கு அதுல உவப்பில்லை, நல்ல மொறுமொறுப்பான வடையும் அந்த அளவுகாரம் போட்ட சட்னியும், சுவையில ஆகாஓகோ தான், பில்டர் காப்பி குறை சொல்ல முடியாது, டீ’யும் உண்டு.
கையிலேந்தி தெருவில் நிற்க்கும் வசதி மட்டுமே உண்டு, உக்காரவெல்லாம் முடியாத்

#NMH (ந்யூ மார்டன் ஹோட்டல்) http://www.newmodernhotel.com/
இதுவும் ஒரு பழைய இடம், பழைய காங்கிரஸ் தலைவர்கள் படம் எல்லாம் வச்சிருப்பாங்க (அது ஜனதா கட்சிக்காரங்கன்னு ஒருத்தன் சொல்றான், நம்ம வேலைய நம்ம பார்ப்போம்),
அதே இட்லி வடை காரபாத் ஐட்டங்கள். கூடவே தோசையும் உண்டு. ’பட்டர் காலி’, தட்டே இட்லி, மசாலா தோசா எல்லாம் ரொம்ப விசேஷம். அதிலும் முக்கியனாம விசேசம் ‘இருளி சாம்பார்’ - சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் பக்கெட்ட கொண்டாந்து உங்க டேபிள்ல வச்சதும் நாக்கு கொஞ்சம் கங்கம்டான்ஸ் ஆடிரும். இங்க காப்பி குடிச்சுட்டே தான் பல பழைய கன்னட படங்களுக்கான திரைக்கதை உருவாச்சாம்,
பாதாம் அல்வா / பெனி / சிரொட்டி - சிறப்பு. MTR மாதிரி காலைடிபனுக்கு காத்துநிக்க வேண்டியிருக்காது
மதியம் மீல்ஸும் உண்டு, அதுல இஞ்சி கொத்துமல்லி போட்ட மோர் தான் ஹைலைட்டு.
விவி.புரம் - மினர்வா சர்கிள் பக்கம் - MTRல இருந்து 1 - 1.5 கிமி, அந்த தோசையை பிச்சு வாயுல போட்டுகிட்டு ஸ்பூன்ல சாம்பாரை டேஸ்ட்டும்‘இதர் ஆவோ’அமித்துகள் கூட்டம் இல்லாமல் சாப்டலாம் ;)

#வித்யார்ததிபவன்
90களில் ஷகீலா படத்துக்கு தியேட்டர்வாசல்ல நின்னா மாதிரி ஒரே பெருசுக கூட்டமா இருக்கும், மணியடிச்சா தான் கடைதிறப்பாங்க, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு இவுங்க :) 7 -11, 2-8 மட்டுமே
காந்திபஜார், பூஜைசாமான் கடைகளுக்கும் பூக்கடைகளுக்கு மத்தியில ஒரு சின்ன இடம். ரொம்ப ‘பாடல் பெற்ற’ இடம்.
மசால்தோசா = வி.பவன். அஷ்ட்டே.. நோ சாம்பார், ஒன்லி சட்னி, மத்த இடம் மாதிரி இல்லாம கொஞ்சம் பொட்டுகடலை அதிகம் போட்ட தேங்காச்சட்னி. ஒரு டஜன் தோசை தட்டை சர்க்கஸ்க்காரன் மாதிரி எடுத்துட்டு வர்ற சர்வர போட்டோ எடுத்துதள்ளும் ஆப்பிளர்களும், கிட்ட வந்ததும் மேல வச்சிருந்த தட்டு தன்னோட தோசையில பட்டு சுகாதரக்கேடு விளைவிக்குமோன்னு யோசிச்சுட்டே சாப்பிடும் ஆட்களும் சூழ்ந்த இடம். NHM பழைய சினிமாக்காரங்கன்னா, இது அந்தக்கால பெரியாப்பீசர்களும் ப்ரொபசர்களும் வரும் இடம்.
இட்லி கிடையாது, ரவா வடா உண்டு. காப்பி - இந்த கள்ளிச்சொட்டு வகையறா.

#த்வாரகாபவன்
என்.ஆர்.காலனி.
பெங்களூரின் பெஸ்ட் ‘பட்டர் காலி’ கிடைக்கிறது இங்க தான்.

#உடுப்பி க்ருஷ்ணபவன்
பாலபெட்/சிக்பெட் - 1926ல இருந்து இந்த கட்டடம் 1902ல இருந்து வியாபரம் இருக்காம்.
ரவா இட்லி, சாகுமசால்தோசை - விசேஷம். காப்பி - உன்னதம்.. ஒரிஜினல் உடுப்பிசாம்பாரில் மிதக்கும் வடை. வாழையிலையில் சுத்தின இட்லி.
காலையில என்னடா க்யூ நிக்கிறாங்கன்னு யோசிக்காம வாங்கி அடிச்சிருங்க - சூப்பர் ஷேவிகேகீர் (பாதாம் சேமியா பாயாசம்)

#CTR (செண்ட்ரல் டிபன் ரூம்) - மல்லேஸ்வரம்.
இதுதான் MTR விட பெஸ்ட்டுன்னு துண்டைபோட்டு தாண்டுற மண்ணின் மைந்தர்கள் உண்டு. வெங்காயம்/பூண்டு சேர்க்காத சமைக்கிற இடம்.

#வீணாஸ்டோர்ஸ் - மல்லேஸ்வரம்
பாத்திரகடைன்னு நினைச்சுறாதீங்க. கையேந்தி நிக்கும் இட்லிவடை காப்பி கடைதான். கூட்டம் மட்டும் எதோ ஆடிதள்ளுபடி சென்னைசில்க்ஸ் அளவுக்கு இருக்கும்

என்னடா ஒரே மாதிரி போகுதே, ஒரு மசாலா வாசமே வரலைன்னு நினைக்கறீங்களா.. ஹிஹி.. இத்தோட இத முடிச்சு அங்க போயிடுவோம்.

#SG ராவ் மிலிட்டரி ஹோட்டல்.
நூறு வயசு தாண்டியாச்சுன்னு சொல்றாங்க, இந்த ஸ்டீம் குக்கிங்/ கேஸ் குக்கிங் எல்லாம் கிடையாது, விறகு அடுப்பு தான். பழையகாலத்து வீடு மாதிரியான இடம்.
சிக்கன்புலாவ், மட்டன்புலாவ் (பிரியானி தான்). கொஞ்சம் குழைஞ்சாப்புல இருக்கும். சாப்ஸ், கீமா
முதல்தடவை காலையில 6 மணிக்கு கூட்டமா வரிசையில நின்னு பிரியாணி வாங்கிறத பார்த்தேன், பெரும்பாலும் பார்சல், 8 மணிக்கு போன, மதியானம் வா’ன்னு சொல்லிடுவாங்க :( மதியம் ராகிகளிஉருண்டை கிடைக்குமாம்.
முன்னொருகாலத்தில் நைட் அவுட் அடிக்கும் பல சனியிரவுகளின் நீண்ட பயணம் ஞாயிறு காலையில் இங்க முடிவதுண்டு

#தனபால் மிலிட்டரி
சின்னயன்பாளையா, அடுகோடி
இட்லி-பாயா / போட்டி - யோசிக்காம நேரா போயிடுங்க. கார் எல்லாம் வேண்டாம், ரெண்டுசக்கரம் தான் ஆகும்.

#சிவாஜிமிலிட்டரி ஹோட்டல் - பனஷங்க்கரி
காலையில தோசை, ஆட்டுக்கால் சூப், கீமா, பிரியாணி (ஆனா மதியம் கிடைக்கிறது இதைவிட பெட்டர் வெர்ஷன்)
#ரங்கன்னா மிலிட்டரி - கே.ஆர்.ரோடு
இட்லி, தோசை, ராகிமுத்தே, சாப்ஸ் -

மேல சொன்ன ரெண்டும் அகில உலக பேமஸ் ‘தொன்ன’ பிரியாணி கிடைக்குமிடங்கள் :)

இதை அப்படியே ஒரு தொடரா கொண்டுபோக ஆசை, அதை நம்பி தான் தலைப்புல -1-ன்னு போட்டிருக்கேன்..
பயங்கிற பிசி, நேரமில்லைன்னு ஸ்டைலா பேசலாம், ஆனா உண்மை என்னான்னா.. “பேசிக்கல்லி ஐயம் ஏ சோம்பேறி - லெட்ஸ் சீ”..

அப்புறம் முக்கியமா.. நீண்டு நெளிந்து மணிக்கணக்கில் சென்ற கஸ்டமர் காலுக்கு இந்த பதிவு சமர்பணம் ;)






7 comments:

Sethu said...

superrrrrrrrrrrr

Sethu said...

superrrrrrrrrrrrrr

Vijayashankar said...

அருமை கொங்கு ராசா அண்ணா! நாலு டயர் வண்டிகள் போகும் பாதை கிடைத்தால் நன்று!

@TupTamil

ILA (a) இளா said...

தொரை, பதிவெல்லாம் போடுது..

Anonymous said...

உறக்கம் கலைந்தனையோ? எழுத்தில்
கிறக்கம் உண்டாச்சுதே!

Indian said...

பெங்களூரில் கிடைப்பது பொங்கல் அல்ல பொங்கூழ்!

ப்ரசன்னா said...

மறுபடியும் எழுதத் தொடங்கிட்டீங்க. வாழ்த்துக்கள் அருமையா சாப்பாட்டுல தொடங்கியிருக்கீங்க. பெங்களூரூவுக்கு வரும்போது இங்கல்லாம் போகணும் :)